முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்
தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் அருள் எம்.எல்.ஏ அவர்களும் கட்சியின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் அவர் தற்போது பொது மக்களிடம் குறைகளை கேட்க நடமாடும் அலுவலகம் வைத்து வீதி வீதியாக சென்று குறைகளை கேட்டறிய புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் அவரின் இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.அதே போல அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக அங்கம் வகித்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.அதில் அதிமுக 8 மற்றும் பாமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் சேலம் மேற்கு தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சேலம் அருள் மற்றும் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட சதாசிவம் வெற்றி பெற்று எம்.எல் ஏ வாக பதவி வகித்து வருகின்றனர்.இதில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் அருள் ஆரம்பம் முதலே அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
அதேபோல் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்களும் மேட்டூர் தொகுதிக்கான பிரச்சனைகள் மற்றும் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் தொடங்கியுள்ள புதிய திட்டமான நடமாடும் வாகனம் மூலம் தொகுதி முழுவதும் வீதிவீதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்பதோடு, அதற்கு தீர்வு காணவும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அந்த இடத்திலிருந்தே மனுக்கள் அளிப்பது மூலமாக வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் இந்த அதிரடி செயல்பாடானது கட்சி பாகுபாடின்றி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.குறிப்பாக அவரின் இந்த செயலானது ஆளுங்கட்சியினரையே அதிர வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்தின் மூலமாக தினந்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு, அதை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இது மட்டுமல்லாமல் அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் தொகுதி மக்களுக்கு அவ்வப்போது விளம்பர வாகனம் மூலம் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பாமக சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடி செயல்பாடுகளால் ஆளும் கட்சியினர் கூட திக்குமுக்காடி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.
விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக அதிமுக பலமாக உள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் மாநாகராட்சியை திமுக கைப்பற்ற திட்டமிட்டு அதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.இந்நிலையில் பாமக சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடி செயல்பாடுகளால் ஆளும் கட்சியினரே கதி கலங்கியுள்ளதாக பேசி வருகின்றனர்.
குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் பட பாணியில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆரம்பித்துள்ள இந்த திட்டம் ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கே முன் மாதிரியாக உள்ளதாகவும்,மக்கள் தங்கள் குறைகளை கூற எம்.எல்.ஏ அலுவலங்களில் மணி கணக்கில் காத்திருக்கும் சூழலில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய இந்த திட்டத்தை மற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.