சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் சிம்லாவில் கனத்த மழை பெய்தது. அப்போது, இந்த கனமழையால் சிம்லா சம்மர்ஹில் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்தச் நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோடை மலைப் பகுதியில் உள்ள சிவன் மந்திர் நிலச்சரிவிலிருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளிலிருந்து காணாமல் போன மேலும் இருவர் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் மிகுந்த சேதமடைந்துள்ளன. கடந்த ஜூன் 24ம் தேதி முதல் மொத்தம் ரூ 8014.61 கோடி பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் பெய்த கனமழையால் 113 நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை 224 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.