தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

0
29

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் வித்தியாசமான புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகர் பைக் ஓட்ட விநாயகர் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதைத் தவிர பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் செல்வபுரம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம், தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதில் விவாசயி தோற்றத்தில் இருக்கும் விநாயகர் சிலை, முருகன் புல்லட் ஓட்ட பின் இருக்கையில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை, கடல்கன்னி உருவத்தில் இருக்கும் விநாயகர் சிலை, சனீஸ்வரர்ருடன் இருக்கும் விநாயகர் சிலை, சிங்க வாகனத்தில் இருக்கும் விநாயகர் சிலை, டிராகன் மீது இருக்கும் விநாயகர் சிலை, மயில் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் சிலை, சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் ஆகிய பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விநாயகர் சிலை தயாரிக்கும் கலைஞர்கள் “வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக களிமண் சிலைகளும், பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்காக பிரம்மாண்டமாகவும் சிலைகளை தயாரித்து வருகிறோம்.

நாங்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு தகுந்த வகையில் இருக்கும். தண்ணீரில் எளிமையாகக் கரையக் கூடிய வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூல் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்து வருகிறோம். சிலைகளின் தாங்கு திறனை உறுதி செய்யும் வகையில் சிலைகளின் உட்புறமாக சவுக்கு கட்டைகளை வைத்துள்ளோம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் சிலைகள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வெயிலில் காயவைத்து பின்னர் அதில் சிமெண்ட் சீட் ஒட்டி, வாட்டர் கலர் அடித்து விநாயகர் சிலைகள் தயார் செய்கிறோம். நாங்கள் தயார் செய்யும் விநாயகர் சிலைகளில் செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்துவதோ அல்லது எனாமல் கலப்பதோ இல்லை.

எங்களிடம் இரண்டு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் இருக்கின்றது. தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயார் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் விநாயகர் சிலைகளின் விலையும் சிறிய அளவில் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

இதையடுத்து சிறிய அளவிலான சிலைகள் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 அடி உயரம் உள்ள சிலைகள் 10000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதத்திலிருந்தே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிஙளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து மட்டுமில்லாமல் திருப்பூர், நீலகிரி, ஈரோடு என்று பல பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது” என்று கூறினர்.