பல நாட்டுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15 நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை நகரில் உள்ள பெரிய கடைகள், வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள முன்னணி வணிக வளாகம் உத்தரவை மீறி திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அதன் மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு விசாரித்த போது கடையை மூட மறுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
அந்த அதிகாரிகள் கடையை மூட முயற்சி செய்த போது அவர்களை தடுத்து மிரட்டியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் அதன் மேலாளர் மீதும் பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி வணிக வளாகங்கள் அரசு உத்தரவை ஏற்று முடியுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.