முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை.
தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால் தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நீட் தேர்வு தொடர்பாக கடலூர் மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு கடிதம் வழங்கியும் பலநாட்களுக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனவும், அனிதாவுக்கு ஒரு நீதி நிஷாவுக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பேரவைத்தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை உறுப்பினர்கள் 666 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதில் 134 ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பேரவைத்தலைவர் கூறினார்.
இதுவரை 12 தீர்மானங்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களாகவும், 6 தீர்மானங்கள் தகவல் கோருதல் அடிப்படையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டு பதில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அப்பாவு கூறினார். தினம் இரண்டு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், தீர்மானம் குறித்து கடிதம் அளித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் நிச்சயம் வரும் எனவும் அப்பாவு உறுதியளித்தார்.