இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்படுகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் ஒமிக்ரான் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெல்லியிலும் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும் இதர மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 19 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 578 பேர் பாத்க்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்ட்ராவில் 141 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒமிக்ரான் பாதித்தவர்களில் இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.