நிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!!
சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ். இவர் மேற்கு தாம்பரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஆகாஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் தமிழரசன் என்பவர் குடியிருந்து வருகிறார். சப் இன்ஸ்பெக்டரின் மனைவியும் அவரது மகன்களும் சில வருடங்களாகவே தமிழரசனின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பாக, தமிழரசனிடமும், அவரது தந்தையிடமும் வீட்டின் நிலம் தொடர்பாக தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பற்றி உடனடியாக தமிழரசன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினார். இதை பற்றி தாம்பரம் போலீசார் தமிழரசனிடம் விசாரணை செய்து விட்டு கவிதாவையும் எச்சரித்து விட்டு சென்றனர்.
இதனால் கோபமடைந்த ஆகாஷும், சதீஷும் தமிழரசனின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவருடைய இரு சக்கர வாகனத்தில் எச்சில் துப்பி அசிங்கப் படுத்தியுள்ளனர். இதை பற்றி மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார் தமிழரசன். இதை பற்றி விசாரிக்க தாம்பரம் போலீசார் கவிதாவை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் விசாரணைக்கு கவிதா செல்லாமல் அவரது கணவர் ரமேஷை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.
கவிதா விசாரணைக்கு வராத காரணத்தினால், தாம்பரம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், சித்ரா ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வீட்டிற்கே வந்து விசாரணை செய்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் தமிழரசனையும் அவரது குடும்பத்தாரையும் பயங்கரமாக தாக்க ஆரம்பித்தனர்.
இவர்கள் தாக்கியதில் தமிழரசனின் தாத்தாவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தடுக்க வந்த இன்ஸ்பெக்டர் சார்லசை கீழே பிடித்து தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்பரம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.