பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்கள் 7.25 சதவீத வட்டி விகிதத்தையும் பெறுகின்றனர்.
இதுதவிர எஸ்பிஐ வங்கி வீகேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கூடுதலான பலன்களை வழங்குகிறது, காலக்கெடு 31 மார்ச் 2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வீகேர் டெபாசிட் ஆனது மூத்த குடிமக்களுக்கென்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், 5 வருட முதிர்வு காலத்தில் முதலீட்டாளருக்கு ரூ.7,16,130 கிடைக்கும், அதாவது இதில் வட்டி மட்டும் ரூ.2,16,130 ஆக கிடைக்கும்.
மூத்த குடிமக்களின் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பிக்ஸட் டெபாசிட்டுகளில் 0.50 சதவிகிதம் தவிர, 0.30 சதவிகிதம் அதாவது மொத்தம் 0.80 சதவிகிதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் டிசம்பர் 13, 2022 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்குப் பொருந்தும். பிக்ஸட் டெபாசிட்டுகளில் பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இருப்பினும், எஃப்டி கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.