பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Sakthi

பள்ளி மாணவர்கள் பழைய அடையாள அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்யலாம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய் தொற்று மெல்ல, மெல்ல குறைந்து வர கூடிய சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்சமயம் செயல்பட தொடங்கியிருக்கின்றன. அதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது அந்த விதத்தில், நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பதோடு மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மழலையர் பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவில் திரையரங்குகள் திறப்பது, கோவில்கள் திறப்பது, உள்ளிட்ட பல விஷயங்களில் முழுமையான தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி சீருடை உடன் தங்களுடைய பள்ளி அடையாள அட்டை, பேருந்து பயண அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதோடு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத் துறை சார்பாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்கள். பள்ளி மாணவர்களுக்கான புதிய பேருந்து இலவச பயண அட்டை வழங்குவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை பட்டியல் பெறப்பட்டு பணிகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.