மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலான மாணவ மாணவிகள் பேருந்து மூலமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பேருந்து நிறுத்த கட்டிடம் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் சிவலிங்கபுரம் கிராமத்தின் கண்மாயின் அருகே இருந்த பேருந்து நிறுத்த கட்டிடமும் இடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மாணவ மாணவிகள் அனைவரும் அங்கு இருக்கும் மரத்தடியில் பேருந்துக்காக நின்று வீடுகளுக்கு பயணம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சிவலிங்கபுரத்தில் திடீரென்று மழை பெய்தது. இதில் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்ற மாணவர்கள் நினைந்த படியே பேருந்தில் ஏறி சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து சிவலிங்கபுரம் கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தக் கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.