சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்!
பள்ளி மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய கூறி வேலை வாங்க கூடாது என கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்களை வைத்து ஆபத்தான முறையில் பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜலகண்டாபுரத்தில் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் கட்டிடம் மற்றும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து வந்துள்ளனர். குறிப்பாக 10 அடி உயரத்தில் இருக்கும் குடிநீர் டேங்கையும் சுத்தம் செய்துள்ளனர். அவ்வளவு உயரத்தில் இருக்கும் குடிநீர் டேங்க் கை மாணவர்கள் சுத்தம் செய்யும் போது பலரும் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.
மாணவர்கள் சுத்தம் செய்யும்போது கீழே விழுந்து ஏதேனும் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் என்னவாகும் என்ற எந்த ஒரு அச்சமும் இன்றி அதனை அங்குள்ள ஆசிரியர்களும் வேடிக்கை பார்த்து உள்ளனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள காவல் துறையிடம் புகார் அளித்தனர். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு பள்ளியில் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சில பெற்றோர்கள் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பெற்றோர்கள் கூச்சலிட்டு இருந்த நிலையில் அவர்களிடம், கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தார்.