அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
பள்ளி நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் புதிய கல்வியாண்டில் எப்படி நவீன முறையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் அரசின் திட்டம், அரசின் எதிர்பார்ப்பு மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் எமிஸ் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
பழைய காகித கோப்புகளை கணினிகளில் மாற்ற வேண்டும். நவீன லேப்டாப் கணினிகளை பயன்படுத்த வேண்டும். இதற்கான பயிற்சிகளை அரசு அளிக்க உள்ளது. இதை அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இதன் மூலம் வரும் கல்வியாண்டிலேயே பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.