தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

உலகின் பல நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் வைரஸ் பரவலை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழு என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தான் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்று, தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளையுடன் 21 நாட்களுக்கான ஊரடங்கு முடிகிறது. கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மேலும் ஊரடங்கு நீட்டித்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஊரடங்கை தளர்த்தினால் நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், எல்லா குடும்ப அட்டை தாரர்களுக்கு வரும் மே மாதத்திற்கான அனைத்து ரேசன் பொருட்களும் விலையில்லாமல் இலவசமாக வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம் என்றும், ஆனால் பார்சல் முறையில் தான் விற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.