இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை படைத்துள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணன் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பால் முகவர் சங்கத்தில் இவர் கூறியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம், திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியான செயல் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றம் சாட்டியதுடன் மட்டுமின்றி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அறிக்கையில் அவர் வெளியிட்டிருப்பதாவது :-
தமிழகத்தின் பால் உற்பத்தி தொடர்பாக ‘கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் வரலாறு படைக்கும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் கடந்த 27.11.2024 அன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்கிற சொலவடையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பால் தினத்தை ( 27.11.2024 ) முன்னிட்டு மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ராஜஸ்தான் (14.51 %), மேற்கு வங்கம் (9.76%), ஜார்கண்ட் (9.04%), மத்தியப் பிரதேசம் (8.91 %), சத்தீஸ்கர் (8.62%) அஸ்ஸாம் (8.53%) குஜராத் (7.65 %) ஆகிய மாநிலங்கள் இந்திய அளவிலான பால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியானது கடந்த 2021-202 நிதியாண்டோடு (5.77%) ஒப்பிடுகையில் 2022-2023 நிதியாண்டின் வளர்ச்சி 3.83% ஆகவும், 2023-2024 நிதியாண்டின் வளர்ச்சி 3.72% ஆகவும் சரிவடைந்துள்ளது என்பதை நடப்பாண்டின் தேசிய பால் தினத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெளிவாக குறிப்பிட்டிருக்கும் போது தமிழகம் மட்டும் பால் உற்பத்தியில் வரலாறு படைப்பதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
மேலும், NDDB என்று அழைக்கப்படும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் ( htttp://www.nddb.coop/information/stats/milkprodstate ) வெளியிடப்பட்டுள்ள 2001-2002 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை இந்தியா முழுமைக்குமான பால் உற்பத்தி குறித்த தரவுகளை பார்க்கும் போது அதில் தமிழகம் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை என்பதும், ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் பின்தங்கிய மாநிலங்களோடு மட்டுமே தமிழகம் தவழ்ந்து வருவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக, 2022 – 2023 நிதியாண்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களை கடந்து 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம் திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியான செயல் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது விளம்பர மாடல் அரசு என்பதை இது உறுதி செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவினில் பால் கொள்முதல் தொடங்கி விநியோகம் வரையிலும் தலை விரித்தாடும் ஊழல், முறைகேடுகளை மறைக்கவும், செயலிழந்து போன பால்வளத்துறையை மிகைப்படுத்தி காட்டுவதற்காகவும் முதல்வர் மூலமாக தவறான புள்ளி விவரங்களை கொண்டு கடந்த ஜூன் மாதம் அறிக்கை வெளியிட்ட நிலையில் மீண்டும் அதே அறிக்கையை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அரசுக்கு தவறான தகவல்களை அளித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இனியாவது பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிகையோடும், கவனமுடனும் இருந்து அதிகாரிகள் தரும் புள்ளி விவரங்கள், தகவல்களை நன்றாக ஆய்வுக்குட்படுத்தி செயல்படுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.’ என்று அவர் கூறியுள்ளார்.