மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!!

0
214
#image_title

மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!!

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் அதில் தோல்வியினை தழுவிய நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அப்போது அம்மாநில முதல்வராக இருந்த சந்திர சேகர ராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, தமிழிசை சௌந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பினையும் கடந்த 2021ம் ஆண்டு ஏற்றார்.

தெலுங்கானா அரசுடன் அவருக்கு சரியான உறவு இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் அவர் புதுச்சேரியிலேயே தங்கியிருந்தார். இதற்கிடையே இவரது ஆளுநர் பதவியினை ராஜினாமா செய்யப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

தமிழிசை சௌந்திரராஜனின் ராஜினாமா கடிதம் இந்திய குடியரசு தலைவரான திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் தனது அரசியல் வாழ்வில் நுழைந்துள்ளார். தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த இவர் முதன்முறையாக கமலாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார். தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பெருமளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழிசை சௌந்திரராஜன் தன்னை மீண்டும் பாஜக’வில் இணைத்து கொண்டார். அவருக்கான அடையாள அட்டையும் அண்ணாமலை கையால் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous article2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
Next articleதேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!