விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம்? விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள்
கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.அங்கு நடைபெறும் அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி கூட்டங்களை முடித்து விட்டு 25 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் சென்னை திரும்பிய சில நாட்களில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்போது புதிய தொழில் கொள்கை, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பரந்தூர் விமான நிலைய விவாகரம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சரவையில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
மேலும் இந்த கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தன்னிடம் உள்ள ரிப்போர்ட்டை சம்பந்தப்பட்ட அவர்களிடம் காண்பித்து அது குறித்து சில அறிவுரைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.சிலருக்கு அமைச்சரவை இலாகா மாற்றம் கூட நடக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.