அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

0
83

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் ஆலங்குடி என்னும் ஊர் உள்ளது.ஆலங்குடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்டது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்த ரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிர்மேசர் ஆகிய சப்த லிங்கங்களோடு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் காட்சியளிக்கின்றனர்.

ஆக்ஞா கணபதி, சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாண சாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவ மூர்த்தங்களும் இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 161வது தேவாரத்தலம் ஆகும்.இத்தலத்து சிறப்புடைய விசேஷ மூர்த்தியான குருதட்சிணாமூர்த்தி உள்பிரகாரத்தில் தெற்கு கோஷ்டத்தில் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் ஊரின் நடுவே அழகாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது.இத்திருக்கோயிலில் ஞான கூபம் என்னும் தீர்த்த கிணறு அமைந்துள்ளது. மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் காட்சியளிக்கின்றனர்.சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை. அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி தனிச்சன்னதியில் அழகே வடிவாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவளது பெயரும் சுக்ரவார அம்பிகை என்பது சிறப்புமிக்கது.

குருபெயர்ச்சி ஆராதனை, சித்திரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம், தட்சிணாமூர்த்திக்கு தேர்விழா ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.நாகதோஷம் நீங்கவும், பயம் மற்றும் குழப்பம் நீங்கவும் இங்குள்ள விநாயகரை வழிபட்டு வருகின்றனர். திருமணத்தடை நீங்கவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 

author avatar
Parthipan K