கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை! வனத்துறையினர் மீட்பு..!!
கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் சத்தியமங்கலத்தில் நடந்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருக்கும் புலிகள் காப்பக பகுதியில் புலி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் இரை தேடுவதற்காக வனப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை அடிக்கடி வேட்டையாடி செல்வது பலநாட்களாக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகேயுள்ள கிராம விவசாயி ஒருவரின் தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்து நாயை அடித்துக் கொன்றது. இதனால் சிறுத்தையை உடனடியாக பிடிக்க பவானிசாகர் வனத்துறை அதிகாரிகள் மூலம் கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வழக்கம்போல விவசாய தோட்டத்திற்கு வந்த ஆண் சிறுத்தை அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.
இதனையடுத்து சிறுத்தையின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மூலம் பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க வலையை வீசி மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தனர். இதையடுத்து பவானிசாகர் அருகேயுள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூண்டை திறந்தவுடன் அதிலிருந்த ஆண் சிறுத்தை வேகமாக காட்டிற்குள ஓடியது. அப்பகுதியில் காட்டு விலங்குகளால் வீட்டு விலங்குகள் அதிகம் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.