அமெரிக்காவின் வாஷிங்டன் தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒருவரைச் சுட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். சுடப்பட்ட நபரின் உடல்நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு இருப்பதால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டிரம்ப் கூறினார்.