பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை
தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கம்பத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான தனிப்படையினரும், உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸரேயா குப்தா,இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் குழுவினர் கம்பம் பகுதியில் தீவிர சோதனை மேற்க்கொண்டனர்.
அப்போது கம்பம் கூடலூர் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான குடவுனில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு பாதாள ரகசிய அறையை போலீசார் கண்டுபிடித்தனர்.பின்னர் அந்த ரகசிய அறையில் இறங்கி பார்த்தபோது புகையிலை பொருட்கள்
அடங்கிய மூட்டைகள் அடுக்கி வைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 132 புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த வேலவன்(வயது 39),அவரது சகோதரர் மாரிச்சாமி (என்ற) சதிஷ்(35) என்பதும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து குடவுனில் பதுக்கி வைத்து கார் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிபதற்காக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் ரகசிய அறை கட்டப்பட்டு குடவுன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேலவன் அவரது சகோதரர் மாரிச்சாமியை கைது செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் புதிய பேருந்து நிலையம் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த வேலவன், சதீஸ் ஆகியோர் பலசரக்கு கடைக்கு கம்பம் நகராட்சி அதிகாரி லெனின் மற்றும் கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி ஆகியோர் கடைக்கு சீல் வைத்தனர்