மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புகின்றன.
மருத்துவ நிபுணர்களையும், மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க தயார் என இங்கிலாந்து அறிவித்துள்ளது. பெய்ரூட் நிலை குறித்து அந்த நாட்டின் சினிமா பட இயக்குனர் ஜூட் செஹாப், பி.பி.சி. டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், “ பெய்ரூட் அழுது கொண்டிருக்கிறது. அலறிக்கொண்டிருக்கிறது. மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். அவர்கள் சோர்வாகவும் இருக்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டார்.