இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!!

0
51

இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில்  பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தில் ஓரிரு நாட்கள் முழு ஊரடங்கு என அறிவித்து அதை செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது அமலில் உள்ளது. மேலும் தொற்று பரவலை பொறுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தற்போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்யப்பட்டு வருகிறது. அதில் 18 சதவீதம் நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2-வது அலையின் போது 38 சதவீதம் வரை நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்த முறை இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அலட்சியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும், அவசியம் இருந்தால் மட்டும் வெளியே வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.