குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!
மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர்.
அந்த நேரத்தில் சென்னையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த புழுங்கல் அரிசி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வேகவைத்த அரிசி கிலோ 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பாஸ்மதி அரிசி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், பழுப்பு அரிசி கிலோ 37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இட்லி அரிசி 40 ரூபாய்க்கும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு 10 ரூபாய் வரையிலும் அதிகரித்தது. மேலும் சில்லரை விற்பனையில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை 15 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை உயர்ந்தது.
இவ்வாறு அரிசியின் விலை அதிகரிக்கும் பொழுது மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடையில்லா ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்தது. தற்பொழுது கோடை விளைச்சலும் அதிகமாகி சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதால் அரிசியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
அதாவது தற்பொழுது புழுங்கல் அரிசி கிலோவுக்கு 8 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதையடுத்து அரிசியின் விலை திடீரென்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிசியின் இந்த திடீர் விலை மாறுதல்களினால் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி 6 மாதங்களில் அரிசியின் விலை எவ்வளவு கடுமையாக அதிகரித்து வந்தாலும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அரிசியில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது என்று அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படியே தற்பொழுது வரை ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.