தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
ஒரு தனி நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக தொகையை, நகைகள், பரிசுப் பொருள்கள் போன்றவற்றை கைகளில் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களோடு எடுத்து செல்ல வேண்டும் மீறினால் தொகை பறிமுதல் செய்யப்படும், பிறகு உரிய ஆவணங்களை செலுத்தியே அதனை மீட்க வேண்டும், பொது இடங்களில் காவல்துறை அனுமதியின்றி பொதுமக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள் நடத்துவது போன்றவை கூடாது.
மேலும், அரசு திட்டங்களில் இருக்க கூடிய எம். பி மற்றும் எம். எல் ஏக்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் தற்காலிகமாக நீக்கப்படும், புதிய அறிவிப்புகளை அரசு சார்பில் வெளியிடக்கூடாது.
முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் அரசு அதிகாரிகளை தனியாக சந்திப்பதோ கூட்டமாக சந்தித்து பேசுவதோ கூடாது,அப்படி அவசர தேவைக்காக எனில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி வாங்கியே பேச வேண்டும்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் பிற வேட்பாளர்களின் சாதி, மத, அல்லது குடும்பத்தினரை பற்றி பேசி புண்படுத்தக்கூடாது.
ஒரு தனி மனிதரின் இடத்தையோ சுற்றுசுவரையோ அவரின் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது, ஒரு அரசியல் கட்சி பிற அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அளிப்பதை, சேதப்படுத்தலவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்தன.