விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!!
தற்போது விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம் மாவட்டம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நிலவை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்க இருக்கிறது.
நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இந்த விண்கலத்தை எல்விஎம்-3 என்ற ராக்கெட்டின் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதைகள் நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுற்றுவட்ட பாதை ஐந்தாவது முறையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தை சந்திராயன் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் வெளிவந்துள்ள ஒரு முக்கிய செய்தியில் வெற்றிகரமாக தற்போது விண்ணில் பயணித்துக் கொண்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு தகடுகள் யாவும் சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இது சேலம் மாவட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு மணி மகுடம் ஆகும். ஏற்கனவே சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகப்புகழ் பெற்றவையாகும்.
சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் சந்திராயன் 3 விண்கலத்தில் பயன்படுத்தியதை தொடர்ந்து இஸ்ரோ சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு கடிதம் எழுதி அனுப்பி உள்ளது. இதன் மூலம் சேலத்தின் புகழ் விண்ணை தாண்டியும் எதிரொலிக்கின்றது.