பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

Photo of author

By Savitha

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை – போலிசார் வழக்கு பதிந்து விசாரணை.

கோவை பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் வந்து செய்து கொள்ளக் கூடிய தலமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கோயில் வளாகத்தில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதாகவும் 22 முதல் 25 ஆயிரம் வரை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு கடைவீதி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வடவள்ளியில் நேற்று கருப்பராயன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டதற்கும் இங்கு உடைக்கப்பட்ட உண்டியலுக்கும் சம்பந்தம் உள்ளதா?? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.