இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், குறிப்பாக
இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் காட்டப்பட்டிருந்த தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பதாக இடதுசாரி கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன. ஆனால் பாஜக போன்ற கட்சிகள் இப்படத்திற்கு முழுமையான ஆதரவை அளித்தன.
கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியபோதும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகிறது. இதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, படத்தை வெளியிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
“அரசு தொலைக்காட்சி பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது. வெறுப்பை விழைவிக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் ஏற்காது” என்று தெரிவித்துள்ளார். மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படம் தூர்தர்ஷனில் வெளியாவதற்கு எதிராக இந்தியா கூட்டணி இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக இத்தகைய வெறுப்பை விளைவிக்கும் மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருதுவதாக கூறப்படுகிறது.