அடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு, அமலாகத்துறை ரெய்டு என மாறி நடந்து வருவதை காண முடிகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.
அதேபோல் அமைச்சர் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனம், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்பொழுது அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம் என்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து, முறையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொருளியல் கல்லூரி, அருளை மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அவரது அலுவலகம், அவருக்கு சொந்தமான நிறுவனம் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
அதேபோல் அமைச்சர் எ.வ.வேலுவின் சகோதரர், அவரின் மகள், மகன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் சோதனையால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி இருக்கிறது.
எ.வ.வேலு அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால் அவர் துறை சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வீட்டில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி “உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்.. தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான்..” என்பது போல் பண மோசடி செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அமைச்சர் எ.வ.வேலு வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் அவருக்கும் செந்தில் பாலாஜி நிலை தான் வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரி மற்றும் அமலாகத்துறையின் தொடர் சோதனையால் திமுகவின் முக்கிய புள்ளிகள் பீதியில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.