“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் அவை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சில மணி நேரத்தில் நிலைக் கொள்ள இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. நாளை மறுநாள் டிசம்பர் 2 ஆம் தேதி வரை வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டு வருகின்ற டிசம்பர் 3 அன்று அவை புயலாக வலுக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் புதிதாக உருவாக உள்ள புயலுக்கு “மிக்ஜாம்” என்று பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில் அவை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் அண்டை மாநிலமான ஆந்திரா நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலானது டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின்னர் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.