அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைபொருட்களை ஒழிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்டிருந்தாலும் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட முதல் கலந்தாய்வு கூட்டம் இது தான் என்று கூறப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,”கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்படுபவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க, நம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகிவிடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை; போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு,” என பேசியுள்ளார்.
போதைப் பொருட்களை ஒழிக்க பாமக சார்பில் அவ்வபோது அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும் சமீபத்தில் இதை வலியுறுத்தி அண்மையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. பாமக இந்த போராட்டத்தை நடத்திய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்கியுள்ளது பாமகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.