தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
தேனி திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தலைவிரித்தாடி வருகிறது.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமைக்கு சென்ற போதும் இது குறித்து எந்த நடவடிக்கையையும் இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தேனி தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து ரவுடிக் கும்பல் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ரத்தினசபாபதி.தேனி அருகே உள்ள வீரபாண்டியைச் சேர்ந்த இவர் வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் ஆவார்.
இந்த நிலையில் நேற்று இரவு இவர் வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல், உருட்டு கட்டை மற்றும் கற்களுடன் இவரது வீட்டுக்குள் புகுந்து இவரை சரமாரியாக தாக்கினர்.தாக்குதலில் நிலை குலைந்த இவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த பின்னரும் ஒருவர் இவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேலும் உருட்டுக் கட்டை மற்றும் கற்களால் இவரது வீட்டின் கதவு, கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்ப கும்பல் அடித்து நொறுக்கியது.இவரது வீட்டில் உள்ளோரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இவரது வீட்டை நோக்கி வருவதை அறிந்த
மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.பின்னர் இது குறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
வீரபாண்டி காவல் துறையினர் விரைந்து வந்து பலத்த காயமடைந்த ரத்தின சபாபதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வீரபாண்டி காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளரை மர்மக் கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.