குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
நீண்ட கால இடைவெளிக்கு பின், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இன்று பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும், இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதி நடப்பு ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப பாடங்களை விரைவாக நடத்தி முடிக்கவும், திருப்புதல் தேர்வுக்கு சிறந்த முறையில் மாணவர்களை தயார்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.