குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அனுமதி கிடையாது!

Photo of author

By Parthipan K

குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அனுமதி கிடையாது!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவலால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. மேலும் ஒருசில மாநிலங்கள் ஞாயிற்று கிழமை மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தி உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் நாளை மறுநாள் இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் நாளை மறுநாள் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் டெல்லியில் அதிகமாக உள்ளது. எனவே தொற்று பரவலின் காரணமாக நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி ஒருசில கட்டுப்பாடுகளை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், பதினைந்து வயதிற்கு உட்பட்ட சிறார்கள் மற்றும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஆகியோருக்கு நாளை மறுநாள் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. அதேப்போல் விழாவிற்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், உரிய முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.