நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு சில நாட்களாக குறையத் தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டது. மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கையும் நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு வந்தது. அப்படி ரேஷன் கடைகளும் இயங்கவில்லை.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.