இனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து வரும் இந்த சூழ்நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இந்த ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு இந்த ஒமிக்ரானின் வருகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.47 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 703ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவை இல்லை என்றும் 6 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும் மற்றும் சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முகக்கவசம் அணியலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.