தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் உத்தாண்டு முருகன்(22). இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஜோதி நகர் விளக்கு அருகே முருகன் வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி மிரட்டி உத்தாண்டு முருகனிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டனர்.
மேலும் அருவாளால் முருகனை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிலில் நான்கு பேரும் தூத்துக்குடியில் இருந்து பழங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அவர்கள் புதுக்கோட்டை அருகே சென்றபோது அந்த பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கு இருந்தது. அந்த பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றனர். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இவர்களை பார்த்ததும் சந்தேகம் அடைந்து பெட்ரோல் நிரப்ப மறுத்துள்ளனர்.
அதனால் அவர் நான்கு பேரும் சேர்ந்து அருவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டினார்கள். பின்பு அங்கிருந்து சென்ற மர்ம நபர்கள் அந்த பகுதியில் நின்ற லாரி டிரைவர் இடமிருந்து செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பிரயாண்ட் நகர் 4வது தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் சதீஷ் என்ற மோசஸ் (21) மற்றும் கட்டபொம்மன் நகர் குருவி மேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் கருப்பசாமி என்பதும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரிய வந்தது. மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு பேர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.