இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

Photo of author

By Parthipan K

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும் மற்றும் பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஒருசிலர் செல்போன்கள் மூலம் பொது இடங்களில் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும், அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதும் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்போன் பேசிக்கொண்டே பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து நேர்கின்றது. இதன் காரணமாக, செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவதற்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு கேரள மாநில அரசு கட்டுபாடுகள் விதித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பேருந்துகளில் பயணிகள் சத்தமாக பேசுவதற்கும், பாடல்களை சத்தமாக கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்புகளை அந்த மாநிலத்தின் அரசு பேருந்துகளில் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உத்தரவு தொடர்பாக கேரள மாநில போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கேரளா மாநிலத்தின் அரசு பேருந்துகளில் செல்போன்கள் மிக அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பயணிகள் செல்போனில் பேசும்போது அதிக சத்தத்துடன் பேசுகின்றனர். இவர்களின் இந்த செயல் உடன் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

ஆகவே, அனைத்து பயணிகளுக்கும் பயணம் இனிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.