தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள வீரபாண்டியன் கட்டபொம்மனின் சிலைக்கு மதுரை ஆதீனம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களிடம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தான் உரிய மரியாதை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இன்றைய தலைமுறையினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகளை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் போராடி சுதந்திரம் வாங்கவில்லை என்றால் இன்று நாம் இல்லை.
தொடர்ந்து பேசிய அவர் தற்பொழுது கோவில் இடங்களை தன்னகத்தே வைத்திருப்பவர்கள் யாரும் சரியான முறையில் அதற்குரிய குத்தகை கொடுக்க முன் வருவதில்லை.
மக்களுக்கு பக்தி குறைந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழைக்கு காரணமே இளைஞர்களின் பக்தி குறைவு தான் என்று அவர் தெரிவித்தார்.