இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

0
413

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள்.

மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகள் ஒளிர வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரது வீடுகளை பிரகாசமாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணி என்ன.?

கண்ணுக்கு கண்ணாக திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை காட்சியில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு 18 ரூபாய் என்றால் 95 வாட்ஸ் கொண்ட மூன்று பல்புகள் 15 ரூபாய் தானே என கடைக்காரரை கண நேரம் குழப்பி பல்புகளை வாங்கிச் செல்வார் வடிவேலு. கடைக்காரரை ஏமாற்றி பல்புகளை வாங்கிச் செல்லும் வடிவேலுவைப் போல, பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள்.

கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.‌

அதனடிப்படையில் 36 வாட்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒரு எல்.இ.டி பல்பு 9,987 ரூபாய்க்கு வாங்குவதற்கு அந்தந்த பேரூராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் வழங்கின.‌ இதன்படி 10பேரூராட்சிகளுக்கு மொத்தம்1,300 பல்புகள், ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டன.

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் இயங்கும் ஜே.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ரவி எலக்ட்ரிகல்ஸ் ஆகிய கடைகளில் இந்த பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டது.

பல்பு வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் தேனி லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆய்வில், கொள்முதல் செய்யப்பட்ட இந்த வகை எல்.இ.டி. பல்பு ஒன்றின் குறைந்தபட்ச விலை 1200 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2500 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என கண்டறியப்பட்டது.‌ கூடுதலாக ஒரு பல்புக்கு 7487 ரூபாய்க்கு கணக்கு காட்டி கொள்முதல் செய்ததில் 97லட்சத்து 33ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது அம்பலமானது.‌

இதுதொடர்பாக தேனி மாவட்ட பேரூராட்சிகளின் முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி – பாலசுப்பிரமணியன், தென்கரை – மகேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் மற்றும் க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 13 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 10ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பல்பு ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பல்புக்கே ஒரு கோடி ரூபாய் என்றால். இன்னும் இதுபோல எத்தனை கோடிகள் களவாடப் பட்டிருக்குமோ என குமுறுகின்றனர் பொதுமக்கள்.

Previous articleஅனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !
Next articleதேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here