எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Photo of author

By CineDesk

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு, அதன் மூலம் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்துஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதை வெளியிட்டுள்ளது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 வரையிலான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் அதிமுக அரசுக்கு 76-83 வரையிலான இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்போம் என 38.20 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 28 .48 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 6.30 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.84 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளது.

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற எது உதவும் என்ற கேள்விக்கு ஸ்டாலினின் தலைமை என அதிகபட்சமாக 37.96 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மதசார்பின்மை – 8.35 சதவீதம் பேரும், எடப்பாடி ஆட்சிக்கு எதிரான மனநிலை என 6.72 சதவீதம் பேரும், அதிமுக – பாஜக கூட்டணி என 9.16 சதவீதம் பேரும், அதிமுக அரசு மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு என6.48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன? என்ற கேள்விக்கு சந்தர்ப்பவாத கூட்டணி – 36.87%, தமிழகத்துக்கு நல்லது – 16.66%, அதிமுக ஆதாயமடையும் – 8.44%, திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் – 7.02%, பாஜக ஆதாயமடையும் – 5.91%, வேறு கருத்து – 7.61%, தெரியாது/ சொல்ல இயலாது – 17.49% என கருத்துக்கணிப்பு மூலம் வெளியாகியுள்ளது.