மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?
தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டமன்றத்தை 20ந்தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
17-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடியபோது, பட்ஜெட் தொடர்பான விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.கடைசி நாளில் முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். பிப்ரவரி 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை.
இந்நிலையில் மார்ச் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுவதாகவும், இதில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு 9ம் தேதி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.