ஒரு பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்று 2 இளைஞர்கள் அவரின் மார்பகங்களில் கை வைத்தும், பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தபோது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற நபர்கள் உடனே சென்று சிறுமியை காப்பாற்றியுள்ளனர். சிறுமியின் மார்பகத்தை தொட்டு, ஆடையை அவிழ்க்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் சிறுமி காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரும் உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும், குற்றத்தை செய்யவில்லை என்றும் குற்றம் செய்வதற்காக தயாராகி வந்ததாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதை தாக்குதல் முயற்சியாக கருதலாமே தவிர, பலாத்கார முயற்சியாக கருத முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றம், ”பெண் ஒருவரின் மார்பகங்களை தொடுவதோ, அவரின் பைஜாமா, கீழாடையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாக கருத முடியாது. சிறுமி பலாத்காரம் செய்வதற்கு முன்பே காப்பாற்றப்பட்டுள்ளார். பலாத்கார முயற்சி என்ற குற்றத்தை செய்வதற்கும், அதற்கு தயாராவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த சம்பவத்தில் பலாத்கார முயற்சி நடந்ததாக உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் பிரிவு 354 and 354(b) மட்டுமே பதியலாம் என்றும் போக்சோ வழக்கு பதிய வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.