கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்!

0
259
#image_title

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம் – இரண்டாம் ஆண்டு மாணவன் கீழே விழுந்ததில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி மருத்துவமனையில் அனுமதி – நான்கு மாணவர்கள் தற்காலிக சஸ்பெண்ட் – ஆறு பேர் கொண்ட குழு விசாரணை.

சென்னையைச் சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில் இவரது மகன் சபிக் அகமது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினம் தோறும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10ம்தேதி சபிக் அகமது பிறந்தநாள் வந்துள்ளது. இதனை சக மாணவர்களுடன் சபிக் அஹமத் கல்லூரி மாணவர்கள் விடுதி அறைக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாள் கொண்டாடும் மாணவனை கட்டியணைத்தும் கைகளால் அடித்தும் கொண்டாடியுள்ளனர்.

அப்போது மாணவன் சபிக் அகமது கீழே விழுந்துள்ளார். சக மாணவர்களும் அவர் மீது விழுந்து அவரிடம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் கீழே விழுந்த ஷபிக் அகமத் நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை சுய நினைவு இன்றி இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர்.

சபிக் அகமது மூளைக்கு செல்லக்கூடிய முக்கிய நரம்பு கழுத்துப்பகுதியில் கட்டானதால் சுய நினைவு இன்றி கோமா நிலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரையில் அவர் சுய நினைவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால் வழக்கு பதிவு எதுவும் இதுவரையில் செய்யவில்லை, அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணை அடிப்படையில் நான்கு மாணவர்கள் மூன்று மாதத்திற்கு கல்லூரிக்கு வர தடை விதித்து தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்பதற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்ட போது ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இராஜஸ்ரீ யிடம் கேட்டபோது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை எந்த தகவலும் உறுதியாக தெரிவிக்க முடியாது என கூறினார்.

பாதுகாப்பு மிகுந்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்கியது யார்? அதிகாரிகளின் அலட்சியமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Previous articleமுதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.
Next articleரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!