அமெரிக்காவில் படகு அணிவகுப்பால் நிகழ்ந்த விபரிதம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து டெக்சாஸ் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் படகு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தனர். டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினுக்கு அருகில் உள்ள டிராவிஸ் ஏரியில் நேற்று இந்த அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்று படகுகளை உற்சாகத்துடன் செலுத்தினர்.
அப்போது பல்வேறு படகுகள் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கின. அதில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இந்த ஏரியில் சில சமயங்களில் படகுகளை செலுத்துவது கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படகு அணிவகுப்பின் போது பெரிய அலைகள் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதேபோன்று புளோரிடா மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் “டிரம்ப் படகு அணிவகுப்புகள்” நடைபெற்று வருகின்றன.

Leave a Comment