படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?
குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் இயங்கி வரும் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11 வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியில் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் குன்றத்தூர் தேரடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மாணவன் சந்தோஷ் பேருந்து ஜன்னல் கம்பியில் இருந்து கை நழுவி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். மாணவன் சந்தோஷ் முன் பக்க படியில் இருந்து விழுந்த வேகத்தில் பேருந்தின் பின் பக்க சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த சந்தோஷை பேருந்தில் பயணித்த சக பயணிகள் மீட்டு சென்னை கீழ்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டிற்கும் மாணவனுக்கு இரண்டு கால் பாதங்கள் கடுமையாக சேதமடைந்து இருந்த காரணத்தினால் அவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி இருக்கின்றனர். இதை தொடர்ந்து மாணவன் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
படியில் தொங்கிய படி பயணம் மேற்கொள்ள கூடாது என்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பலமுறை அறிவுரை வழங்கியும் அவர்கள் வயது கோளாறால் காதில் போட்டுக் கொள்ளாமல் விதியை மீறி செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் முந்தியடித்திக் கொண்டு பேருந்துகளில் ஏறுகின்றனர். பேருந்துக்குள் இடம் இல்லாமல் போவதால் படியில் பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
சில இடங்களில் போதிய பேருந்து வசதி இருந்தும் ஸ்டைல், சாகசம் என்ற பெயரில் சில மாணவர்கள் வேண்டுமென்றே படியில் பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். உயிர் பயம் இல்லாமல் இது போன்று ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் மாணவர்களுக்கு, இரு கால்களை இழந்த மாணவன் சந்தோஷின் நிலை ஒரு படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.