டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!

Photo of author

By Mithra

டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள்  வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி 6ம் தேதி கேப்பிட்டல் கட்டடத்தில் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து வாஷிங்டன் டிசி நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து நிலைமையை சரிசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, டிரம்பின் பக்கங்களை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக மட்டுமே தடை விதித்திருந்தது. இந்நிலையில், டிரம்பின் பேஸ்புக் பக்கத்தை 2 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 7ஆம் தேதி முதல் கணக்கில் கொண்டு 2023ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை டிரம்பின் பேஸ்புக் பேஜ் முடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் பேஜை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு வாக்களித்த 52மில்லியன் மக்களை அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார். மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.