மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!
இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முப்படைகளின் மரியாதை அளித்து பிரதமர் மோடி மிகச் சிறப்பானை வரவேற்பை அளித்தார். பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தியின் நினைவுகளை பார்வையிட்டு, அங்கிருந்த ராட்டையை சுற்றினார். சபர்மதி ஆசிரம குறிப்பில் மோடியை பற்றி எழுதினார் தவிர காந்தியை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.
பின்னர், பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார். இதனையடுத்து டெல்லி ஆக்ராவை சுற்றி பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இரவு ஓய்வு டெல்லியிலேயே முடிந்தது. இரண்டாம் நாளான இன்று, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த டிரம்ப்புக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, தனது மனைவி மெலனியாவுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ராஜ்க்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், மரக்கன்று ஒன்றையும் இருவரும் சேர்ந்து நட்டுவைத்தனர். காந்தியின் நினைவிடத்திற்கு செல்பவர்கள் பார்வையாளர்களின் குறிப்பேட்டில் காந்தியின் கடந்தகால புகழை பற்றியோ அல்லது அவரின் போராட்டத்தை பற்றியோ எழுதுவது மரபு. சபர்மதி ஆசிரமத்தில் காந்தியை பற்றி குறிப்பிட தவறிய டிரம்ப், ராஜ்காட்டில் அவரது நினைவிடத்தில் மறக்காமல் பதிவு செய்துள்ளார். குறிப்பில்; “மகாத்மா காந்தியின் எண்ணப்படி இறையாண்மை கொண்ட மற்றும் அற்புதமான இந்தியாவுடன் அமெரிக்க மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்’ “இது மிகப்பெரிய கெளரவம்’ என்று எழுதினார்.