சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை!
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த கஞ்சா வியாபாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பல்லவர்மேடு பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கொடுத்த தகவல்படி அந்த பகுதியில் உள்ள மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 500 கிராம் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் அதற்கான மூலப்பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைதொடர்ந்து அவற்றை கைபற்றி அங்கிருந்த சிவசங்கரன் மற்றும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் விசாரணையில் அவர்களுடன் திருத்தணியை சேர்ந்தவர்கள் சோமேஸ்(வயது 21), லோகேஷ்(வயது 22), ஜெயகுமார்(வயது 23) ஆகியோர் என தெரிந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது பாலாஜி என்பவருக்கு தெரிந்துள்ளது. அவர் இவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளனர். பாலாஜி தற்போது சிறையில் உள்ளார். அவர் வெளியில் வந்தவுடன் தீர்த்து கட்ட நாட்டு வெடி குண்டு தயாரித்ததாக இந்த மூவர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஐந்து பேரையும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.