மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை
மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. தொடர்பான வீடியோ ஒன்று சமூக பயணித்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
நம் தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று மதுரை சர்வதேச விமான நிலையம். தென் தமிழகத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாக இது திகழ்கிறது. இந்த விமான நிலையத்தில் உள்ள விமான சேவைகளை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலையம் என்றாலே தண்ணீர் பாட்டில் முதல் அனைத்திற்கும் கட்டணம் மற்றும் பொருட்களின் விலை சற்று அதிகம் தான்.
சென்னை விமான நிலையத்தை ஒப்பிடும்போது மதுரை சர்வதேச விமான நிலையத்தில் அனைத்திற்கும் கட்டணம் என்பது குறைவு தான் இருப்பினும், தற்போது நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விமான நிலையத்திற்கு வந்த ஒருவர் தனது காரை கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளார் அப்போது அங்குள்ள கார் பார்க்கிங் பணியாளர்கள் ஹிந்தியில் கடுமையாக அவரை தாக்கி பேசியுள்ளனர். மேலும், 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்ட காருக்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறுகிறார்.
இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து நிமிடத்திற்கு ₹500 என்பது மிகப்பெரிய கட்டண கொள்ளை என்றும் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.