கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!!
கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.விலையானது ஒரே மாதிரியாகவே நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஸ்யா கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி போர் தொடுக்க ஆரம்பித்ததும் உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்களின் விலையானது மளமளவென உயரத்தொடங்கியது. தடாலடியாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை நான்கரை டாலர் உயர்ந்து நூறு டாலரை எட்டியது.
கச்சா எண்ணையின் விலை 2014-ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் தான் இவ்வளவு உயர தொடங்கியது பல நாடுகளுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த விலை உயர்வு கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாயின் விலை 129 டாலர் என்ற அளவுக்கு உச்சக்கட்டமாக உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விலைவாசி உயர்வுக்கும் வித்திட்டது.
இதனால் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த மே மாதம் 21-ஆம் தேதி ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ 9-உம் டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ 7.50-உம் குறைத்தது.இதே போல் சென்னையில் பெட்ரோல் ரூ 8.22 காசுகள் குறைந்து ரூ 102.63 காசுக்கும், டீசல் ரூ 6.70 காசுகள் குறைந்து ரூ 94.24 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த மார்ச்சில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை விலை தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்த நிலையில் 76 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்திய நாட்டில் 200 நாட்கள் ஆகியும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் பெரும் வீழ்ச்சியை சந்தித்த இந்த நிலையிலும் ஒன்றிய அரசு விலையை குறைக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு வஞ்சனை செய்யும் செயல்! என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்குமா? அதற்க்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
எனவே கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் ஒன்றிய அரசினை வலியுறுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை குறையும் என பொது மக்களும் எதிர்ப்பார்ப்புடன் காத்துள்ளனர்.